நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் சுயேச்சைக் குழுக்கள் வசமானது

நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் சுயேச்சைக் குழுக்கள் வசமானது

நாவலபிட்டிய நகர சபையின் முதல் கூட்டம், மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.பீ.கே. சமில அத்தபத்து தலைமையில் இன்று நாவலபிட்டிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நகர சபையின் புதிய தலைவராக, சுயேட்சைக் குழு எண் 02 இன் கீழ் தெரிவு செய்யப்பட்ட, முன்னாள் நகர முதல்வரான அமல் பிரியங்கர 9 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சுயேட்சைக் குழு எண் 01 இன் கீழ் தெரிவு செய்யப்பட்ட கே. சுரேஸ்வரனுக்கு 9 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

தேசிய மக்கள் சக்தி சார்பில் நகர சபையின் தலைவர் பதவிக்கு திலக் அமரசிறி சிறிசேனவும் பிரதித் தலைவர் பதவிக்கு ஹேவகே பிரசன்ன ஆகியோர் முன்மொழியப்பட்டதுடன், அவர்கள் இருவரும் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் தலா 5 வாக்குகளைப் பெற்றனர்.

நகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டனர்.

நாவலபிட்டிய நகர சபைக்கு தேசிய மக்கள் சக்தியிலிருந்து 5 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 01 இலிருந்து 2 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கூட்டணியிலிருந்து 1 உறுப்பினருமாக மொத்தம் 15 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

எந்தவொரு குழுவிற்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால், சுயேட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து நாவலபிட்டிய நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகளைப் பெற்றன.

இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேச சபை இன்று காலை மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கி கல்ஹாரி ஜயசுந்தர தலைமையில் கூடியது.

மொத்தம் 26 உறுப்பினர்களை கொண்ட வலல்லாவிட்ட பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி சார்பில் தவிசாளர் பதவிக்கு சுனில் அபேசிறியும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தவிசாளர் பதவிக்கு இந்திக மல்லவஆரச்சியும் இலங்கை பொதுஜன பெரமுனவிலிருந்து உதேனி அத்துகோரல ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டன.

தலைவரைத் தெரிவு செய்ய, பகிரங்க வாக்கெடுப்பு மற்றும் இரகசிய வாக்கெடுப்பு ஆகிய இரு முறைகளும் முன்மொழிவுகள் வந்ததால், சட்டத்தின்படி தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பை நடத்த ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார்.

நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் 16 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் 5 வாக்குகளையும், இலங்கை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் 3 வாக்குகளையும் பெற்றனர்.

அதன்படி, 16 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுனில் அபேசிறி, வலல்லாவிட்டை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This