அநுர அரசை 5 வருடங்களுக்கு ஆளவிடக்கூடாது என்பதே மக்களின் கோரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆளக்கூடாது எனவும், அரசை விரட்டி அடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாட்டு மக்கள் கோரி வருகின்றனர் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்த அரசாங்கத்துக்கு கடந்த ஒரு வருட காலப்பகுதியில் நாம் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை. நாட்டை மேம்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டது. வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. இந்நாட்டுக்கு வரவேண்டாம் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தவில்லை.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பயணிப்பதற்கு இடமளிப்பதற்கு நாம் தயார். ஆனால் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புமாறு அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். இது பற்றி எம்மிடமும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஏன் மௌனம் காக்கின்றீர்கள்? நாட்டை சீரழிக்க இடமளிக்க வேண்டாம் என மக்கள் எம்மிடம் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.” -என்றார் மஹிந்த அமரவீர.
