வடக்கு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டனர்

வடக்கு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டனர்

தமிழனான எனது குரல் உள்ளூராட்சித் தேர்தலுக்காக முடக்கப்பட்டது. அதனையும் தாண்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு 80 ஆயிரம் வரையிலான வாக்குகள் விழுந்துள்ளன. இதில் ஒரு சிறிய அளவிலே நான் அவருக்கு வழங்கிய ஆதரவு உள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்காமல் தமிழ் கட்சிக்கு வழங்கினேன் என யாழ். சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற பொது போக்குவரத்து தர நிர்ணயங்களுக்கமைவான பேருந்துகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வருதல் தொடர்பான சட்டங்களை தயாரித்தல் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த நாட்டை நீங்கள் முன்னேற்றுவதாக இருந்தால் நாங்கள் ஆயிரமல்ல, பத்தாயிரம் வீதம் ஆதரவளிப்பதாகவே வடக்கு மக்கள் உங்களுக்காக மூன்று ஆசனங்களை வழங்கினார்கள். இலங்கை போக்குவரத்து சபை 1950களில் ஆரம்பிக்கப்பட்டதாக இங்கே கூறப்பட்டது.

ஆனால் இ.போ.ச ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே 1938ஆம் ஆண்டில் எனது அம்மாவின் தந்தை ‘நோதோன் ஒப்பிசுவரி கம்பனி’ என்று 160 பஸ்களை வைத்திருந்தார். அங்கிருந்து பஸ்கள் வாங்கப்பட்டே 1950 காலத்தில் இ.போ.ச ஆரம்பிக்கப்பட்டது. அந்த வரலாற்றை கொண்டுள்ள நாங்கள் வடக்கு – கிழக்கில் உள்ள பஸ்களை திருத்தித் தருமாறு கேட்கின்றோம்.

பஸ் நிலையங்களை சுத்தம் செய்வதல்ல அபிவிருத்தி, நீங்கள் 159 உறுப்பினர்களை கொண்டுள்ளீர்கள். நாங்கள் தமிழர்களாக எப்படி வரவேற்றோம். வடக்கு மாகாண வரவு – செலவுத் திட்டம் என்று கூறுமளவுக்கு இருந்தோம். ஆனால் கடந்த 7 மாதங்களில் நீங்கள் வடக்கு, கிழக்கில் செய்த அபிவிருத்திகள் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்.

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி, பிரதமர் வந்தார்கள். கோயில் திருவிழாக்கள் போன்று பிரசாரங்கள் இருந்தன. அரசியலையும் தாண்டி தமிழ் மக்களுக்குரிய விடிவை செய்வீர்கள் என்று நாங்கள் நம்பினோம். இப்போது வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் உங்களை முற்றாக எதிர்க்கின்றனர்.

அதற்கு முக்கியமான காரணமாக தமிழனாக எனது குரலை நீங்கள் உள்ளூராட்சித் தேர்தலுக்காக முடக்கி வைத்தீர்கள். ஆனால் அதனையும் தாண்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு 80 ஆயிரம் வரையிலான வாக்குகள் விழுந்துள்ளன. இதில் ஒரு சிறிய அளவிலே நான் அவருக்கு வழங்கிய ஆதரவு உள்ளது. ஏன் நான் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்காமல் தமிழ் கட்சிக்கு வழங்கினேன். அதற்கு காரணம் நீங்கள் பொய் கூறுகின்றீர்கள்.

உங்களுடைய அமைச்சருக்கு ‘வெற்றி’ என்று கூட கூறத் தெரியவில்லை. தயவு செய்து சிந்தியுங்கள். வாருங்கள் எங்களின் நிலங்களை பாருங்கள். பாதைகளுக்காக ஐயாயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளீர்கள். அதனை அபிவிருத்தி குழுவில் பெற்றுக்கொள்ள உதவுங்கள். நாங்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளோம். மீண்டும் உங்களுக்கு சந்தர்ப்பம் வேண்டுமென்றால் உண்மையை கதையுங்கள் என்றார்.

Share This