
எதிரணியால் அரசை அசைக்க முடியாது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை. மக்களுக்குரிய உதவித் திட்டங்கள் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை, நாட்டுக்கு தேவையானதொரு எதிர்க்கட்சி எமது நாட்டில் இல்லை என்பதும் பேரிடராகும்.
நாட்டுக்காக இணைந்து செயல்படவேண்டிய தருணங்களில்கூட பொறுப்பை மறந்து, எதிரணிகள் அரசியல் நடத்தும் நிலை காணப்படுகின்றது.
பாதாள குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சில எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு நடுக்கம் ஏற்படுகின்றது. ஊழல், மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதும் அவர்களுக்கு ஆட்டம் ஏற்படுகின்றது.
மிகவும் மோசமான முறையிலேயே பிரதான எதிரணி செயல்பட்டுவருகின்றது. இந்த எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் சிறப்பாக செயல்படுகின்றது.”- என்றார்.
