மன்னாரில் 9ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ள தொடர் போராட்டம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (11) 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.
எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கீளியன் குடியிறுப்பு,நடுக்குடா,கட்டுக்காரன் குடியிறுப்பு, பருத்திப்பன்னை, பாவிலுப்பட்டான் குடியிறுப்பு உள்ளிட்ட உள்ளிட்ட கிராம மக்களும் இன்று (11) 9 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.மேலும் மன்னார் மாவட்ட ஒளிக்கலை ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்கிய நிலையில் அவ் ஒன்றிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் மன்னார் மக்களும்,இளையோரும் இணைந்து தொடர்ச்சியாக இரவு பகல் பாராது போராட்டம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .