
பேரழிவால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பேரிடரால் 5,325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அந்த மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1,815 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 767 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், குருநாகல் மாவட்டத்தில் 476 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 415 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 404 வீடுகளும் மற்றும் கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், பேரிடரால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 13,422 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் 11,601 வீடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 7,869 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 7,291 வீடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 5,830 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 4,809 வீடுகளும், வவுனியா மாவட்டத்தில் 4,135 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 3,742 வீடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 3,600 வீடுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 3,526 வீடுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 2,249 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அங்கு 98,146 குடும்பங்களைச் சேர்ந்த 349,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 85,803 குடும்பங்களைச் சேர்ந்த 328,847 பேர் பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 51,098 குடும்பங்களைச் சேர்ந்த 161,140 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 25,999 குடும்பங்களைச் சேர்ந்த 86,376 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 25,055 குடும்பங்களைச் சேர்ந்த 85,891 பேரும், மன்னார் மாவட்டத்தில் 23,641 குடும்பங்களைச் சேர்ந்த 77,451 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 22,918 குடும்பங்களைச் சேர்ந்த 67,340 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 21,948 குடும்பங்களைச் சேர்ந்த 72,359 பேரும் இந்த அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
