கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்?

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்?

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படை பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய சந்தேக நபர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல என்றும் கூறப்படுகிறது.

இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் சுமார் 6 கொலைகளில் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளது.

அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பல உண்மைகளை பொலிஸார் வெளிக்கொணர முடிந்துள்ளது.

புத்தளம் பாலவிய பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றிய ஒருவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அவர் தன்னிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒரு சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட ஒரு சட்டத்தரணியின் அடையாள அட்டையும் அடங்கும் என்றும் கூறினார்.

அவர் முதலில் முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரிலும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனஆராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

சந்தேகநபர் பயன்படுத்திய கொடிகாரகே கசுன் பிரபாத் நிஷ்ஷங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவினால் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This