சட்டம் அனைவருக்கும் சமமானது – செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதிகளின் அரச வீடுகள் திரும்ப பெறப்படும்

செப்டம்பரில் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு இல்லங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,
சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறை மீதான பொது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். நீதியானது செல்வந்தர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தாது என்பதை மாற்றியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
சட்டம் அனைத்து குடிமக்கள் மீதும் சமமாக அமல்படுத்தப்படும். ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, முன்னாள் தலைவர்களுக்கு ஆடம்பர அரசு வீடுகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. 33ஆயிரம் சதுர அடியில் வீடு எதற்கு? கொவிட் தொற்றுக் காலத்தில் அந்த வீட்டை புனரமைக்க 40 கோடியை பெற்றுள்ளனர்.
தியாகங்களைச் செய்யும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, தேவையற்ற செலவுகளை மக்கள் மீது சுமத்த முடியாது. முதலிம் நாம் தியாகங்களை செய்ய வேண்டும். தராதரம் பாராது எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.