
மலையகமே எமது தாயகம் ; வடக்கு கிழக்குக்கு செல்லத் தயாரில்லை
மலையகமே எமது தாயகம் அதனை கைவிட்டு வடக்குக்கோ,கிழக்குக்கோ நாம்,செல்லத் தயாரில்லை என வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே,மலையகத்தில் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.இது தொடர்பில் தோட்டக் கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;
பாராளுமன்றத்தில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில்,தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எந்தவித உறுதியான விடயங்களும் முன்வைக்கப்படவில்லை.தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு,குடியிருப்பு,அவர்களுக்கான உரிமை தொடரில் அரசாங்கத்தின் அனைத்து எம்பிக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர்.
இது மகிழ்ச்சியான விடயம். எனினும் தற்போது நிர்க்கதியாகியுள்ள அந்த மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் 07 பேர்ச் காணியை வழங்கி நிரந்தர வீடுகளையும் நிர்மாணித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்த நிலையிலும் நாம் வடக்கு,கிழக்குக்கு செல்வதற்குத் தயாரில்லை.மலையகமே எங்கள் தாயகம்.அங்குதான், நாம் வாழ்வோம். அங்கு நாம், வாழ்வதற்கான சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தோட்டக் கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எங்கள் காலத்தில் செய்ய முடியாததை உங்கள் காலத்திலாவது செய்து கொடுக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.தேயிலை, இறப்பர் என ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகள் அங்கு காணப்படுகின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணியை வழங்க 5000 ஏக்கர் காணிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும்.இதன் மூலம் எந்த நட்டமும் ஏற்படப் போவதில்லை. அவர்களும் இந்த நாட்டு மக்கள் என்பதை கவனத்திற் கொண்டு அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய காணிகளை பிரித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையக சமூகம் எந்தக் காலத்திலும் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ முடியாது.
இலங்கைக்கு உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் விரும்பி முன்வந்து உதவி செய்யும் இந்திய அரசாங்கத்திற்கு எமது நன்றிகள்.
