மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும்

மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும்

ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது.

இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில், இனங்களைக் கடந்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் உண்டென்றால் அவர் நடராஜா ரவிராஜ். 2006 நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பின் இதயப்பகுதியில் கேட்கப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சத்தங்கள், ஒரு தனிமனிதனை மட்டும் வீழ்த்தவில்லை; மாறாக, இனங்களுக்கு இடையே பாலமாக இருந்த ஒரு பலமான ஜனநாயகக் குரலையே மௌனிக்கச் செய்தன.

1962 இல் சாவகச்சேரியில் பிறந்த ரவிராஜ், ஒரு சிறந்த சட்டத்தரணியாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். 1987 இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், வெறும் வருமானத்திற்காக வாதிடுபவராக இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். மனித உரிமைகள் ஊடாக அவர் ஆற்றிய பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு ‘நீதியின் காவலன்’ என்ற பிம்பத்தை உருவாக்கியது.

யாழ். மாநகர முதல்வராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் உயர்ந்தபோது, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாக வாதிட்டார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பேசுவதோடு நிறுத்திவிடாமல், முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஓங்கி ஒலித்த அவரது குரல், அவரை ஒரு தேசியத் தலைவராக மாற்றியது. சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வலிகளை அவர்களின் மொழியிலேயே புரியவைத்த ஆற்றல் ரவிராஜுக்கு மட்டுமே இருந்தது.

கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள தனது இல்லத்திலிருந்து ஊடக நேர்காணல் ஒன்றை முடித்துவிட்டுப் புறப்பட்ட அந்தச் காலை வேளை (காலை 8.15), மரணம் மோட்டார் சைக்கிள் வடிவில் வந்தது. நாரஹேன்பிட்டி மார்தா வீதி வழியாகத் தனது வாகனத்தில் எல்விட்டிகல மாவத்தைக்குள் அவர் பிரவேசித்தபோது, இனந்தெரியாத நபர்களால் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சரமாரியாகப் பாய்ந்த தோட்டாக்கள் 44 வயதேயான அந்த இளம் தலைவரையும், அவரது மெய்ப்பாதுகாவலர் லக்ஷ்மனையும் சிதைத்தன. தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு நாடே அதிர்ந்தது. படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் கூட, வாகரையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கொழும்பில் ஐநா அலுவலகம் முன் நின்றுகொண்டு, “எங்கள் மக்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆவேசமாக முழங்கியவர் அவர்.

இந்தக் கொலையின் பின்னணியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருந்ததாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. உளவுப்பிரிவு அதிகாரி Liyanarachchige Abayaratne அளித்த சாட்சியத்தில், இந்தக் கொலைக்காக ‘கருணா குழு’ சார்ந்த பிரிவினருக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். கங்காராம கடற்படை புலனாய்வு முகாமில் இருந்த அதிகாரிகளே இதற்கான திட்டத்தைத் தீட்டியதாகச் சாட்சியங்கள் தெரிவித்தன.

பத்து ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், 2016 டிசம்பர் 23 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, நள்ளிரவு 12:25 மணிக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிரதிவாதிகளின் கோரிக்கைப்படி, ஏழு பேர் கொண்ட சிங்களம் பேசும் ‘சிறப்பு ஜுரர் சபை’ இந்த வழக்கை விசாரித்தது.

சாட்சிகள் அடையாளம் காட்டிய போதிலும், மூன்று கடற்படை அதிகாரிகள் மற்றும் கருணா குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேரையும் ஜுரர் சபை ஏகமனதாக விடுதலை செய்தது. “தமிழர் குரலை நசுக்க இராணுவத்துடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களின் முயற்சி இது” என அப்போது சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகச் சாடினர். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட அந்த நள்ளிரவு நேரம், இலங்கையின் நீதித்துறையில் ஒரு கறுப்புப் பக்கமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது.

நீண்ட 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2026 மார்ச் 26 அன்று இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஐந்து பேரையும் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நள்ளிரவில் தீர்ப்பு வழங்கப்பட்ட முறையை “அசாதாரணமானது” என நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா சுட்டிக்காட்டினர்.

குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

ரவிராஜ் மறைந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ள நிலையில், இலங்கை நீதித்துறை தனது கடமையைச் சரிவரச் செய்து உண்மையான நீதியை நிலைநாட்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

D. Rasmila

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )