
மரக்கறி இறக்குமதிக்கு ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது
விசேட அனுமதி தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் விமான சேவை போன்ற சில நிறுவனங்களுக்காக குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் தவிர வேறு எந்தவொரு தரப்பினருக்கும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மரக்கறிகளை இறக்குமதி செய்வதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் நாட்டின் வடக்கு முதல் தெற்குவரையான விவசாயக் காணிகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் வயல்கள் உள்ளிட்ட விவசாயக் காணிகளில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நுவரெலியா, கண்டி, பண்டாரவளை, பதுளை, மாத்தளை உள்ளிட்ட இடங்களில் தேவையான அளவில் மரக்கறிச் செய்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், பண்டிகைக்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையை காரணம் காட்டி மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
