பொய்களை தொடர முடியாமல் தவிக்கும் அரசாங்கம் – குற்றம் சுமத்தும் சாணக்கியன்

பொய்களை தொடர முடியாமல் தவிக்கும் அரசாங்கம் – குற்றம் சுமத்தும் சாணக்கியன்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பல போலி வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அந்தப் பொய்களால் தொடர்ந்தும் ஆட்சி நடத்த முடியாததால் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கத்தால் பதிலளிக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்க்கட்சியையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் விமர்சிக்கும் விடயங்களை மாத்திரமே நாடாளுமன்றத்தில் மேற்கொண்டு வருவதாக சாணக்கியன்  குற்றம் சுமத்தினார்.

இன்று (03) நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“289 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய பெட்ரோல் 309 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதற்கான காரணம் என்ன” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

அதானி கிரீன் எனர்ஜி திட்டம் இலங்கையிலிருந்து விலகியமை நாட்டிற்கு பாரிய ஒரு இழப்பு என சுட்டிக்காட்டிய அவர் மாவட்ட மட்டத்திலே சூரிய மின்கலங்களுக்கு காணி ஒதுக்கும் போது அந்தந்த கிரமாங்களில் இருக்கும் நிலத்தின் எண்ணிக்கையை பார்த்து வழங்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

கட்சியின் தேர்தல் வியாபாரத்தை போசணைப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தை தற்போதைய அரசாங்கமும் மேற்கொண்டு வருகிறது என்ற முடிவுக்கு வர முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது , மீன்பிடி துறையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆரியம்பதி பிரதேசத்தில் வாள்வெட்டு குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க முடியவில்லையெனில் அதனை மூத்த அரசியல்வாதிகளிடமாவது ஒப்படைத்து விடுங்கள் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This