எதிர்க்கட்சியில் இருந்த போது கூறியதை அரசாங்கம் மறந்துவிட்டது – சஜித்

இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் வேலையின்றி உள்ளனர். பல அரச பணியிடங்களில் இவர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. இருந்த போதிலும் இவர்களுக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு சுகாதாரத்துறையில் அத்தியாவசியமான பல பதவிகள் இருந்தாலும், தகுதிகள் இருந்தும் வேலை வழங்கப்படவில்லை. எனவே தகுதிக்கு ஏற்ப வேலை வழங்குமாறு வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டுள்ளனர். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜனநாயக உரிமையை இன்றைய இளைஞர்கள் இழந்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குழுவினர் எதிர்க்கட்சியில் இருந்த போது போதியளவுக்கு எதிர்ப்பு பேராட்டங்களை முன்னெடுத்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஜனநாயக உரிமையைக் கூட அவர்கள் பறித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (28) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பல தசாப்தங்களாக மக்கள் விடுதலை முன்னணியினர் தலைமையிலான திசைகாட்டி காண்பித்த ஒரு வேலைத்திட்டம் காணப்பட்டது.
தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்பு, IMF உடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இல்லை, இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய விரிவாக்கம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்துதல்.
சோசலிச வெறியால் இளைஞர்களை ஆகர்ஷித்து, மாணவர்களை வீதிக்கு இறக்கி அவர்களது கல்வியை சீர்குலைப்பது, உழைக்கும் மக்களை போராட்டங்களுக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை சேதப்படுத்துவது, உயிர்களையும் உடைமைகளையும் கூட அழிப்பது போன்ற பல நோக்குகளையும் வேலைத்திட்டங்களையும் கொண்டிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து முற்றிலும் வேறு வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.