அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியில் – ரஞ்சித் மத்தும பண்டார
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
முன்னாள் கியரை போட்டால் அது பின்னால்தான் அரசாங்கத்துக்கு விழுகிறது. சுற்றுநிரூபங்களை மாற்றியமைக்கும் நிலைக்கு அரசாங்கத்தின் நிலைமை தள்ளப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் உருவான அரசாங்கம் ஜுலை மாதத்தில் கவிழ்க்கப்பட்டது. 2001இல் நாம் அமைத்த அரசாங்கம் 2004இல் வீழ்ந்தது. கோட்டாபய ராஜபக்ச, மூன்று வருடங்களுக்குள் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராடுவோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் எம்முடினே இருக்கின்றன.” என்றார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பேராசிரிய சரித்த ஹேரத்த கருத்து வெளியிடுகையில்,
”அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறியே செயல்படுகிறது. கல்வித்துறையை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளனர். பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிடும் சுற்றுநிரூபங்களை மீள திருத்தியமைக்க போலி கல்வி அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவொரு அரசியல் ‘புட்செலாட்’. எவ்வாறு நாட்டை முகாமைத்துவம் செய்யப் போகின்றனர் என நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” என்றார்.