
அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் – சாமர சம்பத்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட அவர், கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் சாமர சம்பத் தஸநாயக்க கூறியவை வருமாறு,
“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் பக்கம் பல வருடங்களாக வராதவர்கள்கூட இன்று வந்துள்ளனர். கட்சி மீண்டெழும் என அவர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். நிச்சயம் அது நடக்கும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
தேசிய அமைப்பாளர் பதவியை ஒரு வருடகாலமாக நிராகரித்து வந்தேன். கட்சியில் அங்கம் வகித்தால் செயல்பட வேண்டும். அதனால் பதவியை ஏற்றேன்.
நான் வலிந்துசென்று பதவியை கேட்கவில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் எனது திறமையை வெளிப்படுத்தினேன் பதவி கிடைத்தது.
அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும்!ஜே.வி.பிகூட விழுந்துதான் மீண்டெழுந்தது. 3 உறுப்பினர்கள் 159 ஆவதற்கு பல வருடங்கள் எடுத்தன. எனினும், சுதந்திரக்கட்சியும் நிச்சயம் மீண்டெழும்.” – என்றார் சாமர சம்பத் தஸநாயக்க.
