தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக அரச மருத்துவமனைகளை வழங்கும் முடிவு ரத்து

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக பல அரசு மருத்துவமனைகளை வழங்கும் முடிவை ரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு ரத்து செய்யப்பட்டதாக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சிலாபம் ஆதார வைத்தியசாலை மற்றும் சீதுவ விஜய குமாரதுங்க நினைவு வைத்தியசாலை உட்பட பல மருத்துவமனைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது குறித்து அரசாங்கம் தற்போது எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ பீட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகள் மற்றம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இடையே நேற்று இரவு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
வடமேல், சப்ரகமுவ மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் உள்ள பேராசிரியர் பிரச்சினைகளைத் தீர்த்தல், அரச பல்கலைக்கழக கல்வியைப் பாதுகாத்தல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி , கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் அந்தக் குழு லோட்டஸ் சுற்றுவட்டம் வழியாக ஜனாதிபதி அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்ற நிலையில் பொலிஸார் குறித்த வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.