
அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு
தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான பதிலையும் வழங்காத பட்சத்தில், முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று நிறைவேற்றுக் குழு கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட வைத்தியர் சமில் விஜயசிங்க,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாக நாங்கள் பல தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் நியாயமான கோரிக்கையினையே முன்வைத்துள்ளோம்.
இந்த கால அவகாசத்திற்குள் தீர்வுகளைக் கண்டறிவதற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறோம்.
ஆனால் அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தலையிடுமாறு கோரி மத்திய செயற்குழு, சுகாதார அமைச்சருக்கு நேற்று முன்தினம் 48 மணி நேர கால அவகாசத்தை வழங்கியது. இன்றுடன் அந்த 48 மணி நேரம் நிறைவடைகிறது.
அதனூடாக இப்பிரச்சினை தீர்க்கப்படாவிடின், இது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தை மத்திய செயற்குழு, நிறைவேற்றுக் குழுவிற்கு வழங்கியுள்ளது.
அதற்கமைய, எதிர்கால நடவடிக்கைகள் இதைவிட மாறுபட்ட விதத்தில் அமைவது எப்படி என்பதை நாட்டுக்குத் தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் கூறினார்.
