தேசபந்து தென்னகோனின் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

தன்னை கைது செய்யும் உத்தரவை இடைக்கால தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டுப் பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று உத்தரவிட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசபந்து தென்னகோன் தலைமறைவாகவுள்ளார். அவரை கைது செய்ய ஆறு மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தம்மை கைது செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தேசபந்து தென்னகோன் தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேக நபர்களும் தங்களை கைது செய்வதைத் தடுக்கக் கோரி ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி, முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை ஆறு நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரைக் கண்டுபிடிக்க ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.