நாட்டில் உறுதியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை – குகதாசன் எம்.பி

நாட்டில் உறுதியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை – குகதாசன் எம்.பி

2025 ஆம் ஆண்டின் அண்மைக்காலத் தரவுகள் முதன்மையான பொருளாதார குறிகாட்டிகளில் நீடித்த முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. இது மக்களது வாழ்க்கை தரம் மேம்பட்டு வருவதனைச் சுட்டிக் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இவ்வாண்டில் அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரி விதிப்பானது 44வீதத்தில் இருந்து 20 விதமாக குறைக்கப்பட்டாலும் இது ஆடை ஏற்றுமதியை கடுமையாகப் பாதிக்கும். இது இலங்கைப் பொருளாதரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் அண்ணளவாக 24 வீதமானவை ஐக்கிய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வினைத்திறன் உள்ள தொழிலாளர் மற்றும் மூளைசாலிகள் வெளியேற்றம், திறன் பொருத்தமின்மை, குறைந்த பணியாளர் பங்கேற்பு முதலியன உற்பத்தித்திறனைப் பாதிக்கும்.

எனவே இலங்கையானது, மரபு சார் ஏற்றுமதிகளில் தொடர்ந்து தங்கியிருக்காமல் ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்துவதோடு குறுகிய சந்தைகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்தலும் வேண்டும்.

மேலும் திறமையற்ற அரச தொழில் முயற்சியாண்மைகளை மறுசீரமைத்து வருவாய் தரக்கூடியவைகள் ஆக மாற்றுவதோடு அரச, தனியார் கூட்டுடமை முயற்சிகளை ஊக்குவித்தலும் வேண்டும்.

அதேபோன்று சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முதலியவற்றை மேம்படுத்தி மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்யவும் வேண்டும்.

இறுதியாக இன்றைய உலக ஒழுங்கிற்கு ஏற்ப எண்ம மாற்றம், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மற்றும் பசுமை முதலீடுகளை அதிகரித்தல் முதலியனவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கைப் பொருளாதாரம் இப்பொழுது மீட்பு நிலை நோக்கி பயணிக்கிறது. எனினும் கொள்கைப் பின்வாங்கல், கடன் சுமை, வறுமை, வேலைவாய்ப்பு பற்றாக்குறை முதலியன இன்னும் தீரவில்லை.

அடுத்த இரண்டு ஆண்டுகள் முதன்மையானவை ஆகும். நாடு முன்னேறும் பொழுது, பொருளாதார உறுதிப்பாட்டை சமூக சமத்துவத்தோடு சமநிலைப்படுத்துவதிலும், சீர்திருத்தத்திற்கான அரசியல் ஒருமித்த கருத்தைப் பேணுவதிலுமே இந்த மீட்சி நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்குமா என்பதனை முடிவு செய்யும்.

குறுகிய கால மீட்சியை நீண்ட கால மீட்சியாக மாற்றுவதற்கு உறுதியான சீர்திருத்தங்கள் மற்றும் அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிய கொள்கைகள் பன்னாட்டு ஆதரவோடு மேற்கொள்ளப்பட வேண்டும் .

Share This