பாப்பரசர் அல்ல திருத்தந்தை என்பதே சரியானது – சிறு விளக்கம்

பாப்பரசர் அல்ல திருத்தந்தை என்பதே சரியானது – சிறு விளக்கம்

உலகக் கத்தோலிக்க திரு அவையின் திருத்தந்தை என்பதுதான் சரியானது. பாப்பரசர் என்று முன்னர் அழைக்கப்பட்டது.

உலக தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள், தமிழ்நாட்டில் நடத்திய மாநாடு ஒன்றில் கத்தோலிக்கச் சமயத்துக்குரிய பல தமிழ்ச் சொற்களில் மாற்றங்களைச் செய்துள்ளனர்.

முன்னர் பாப்பரசர் என அழைக்கப்பட்டதை, பின்னர் திருத்தந்தை என்று மாற்றம் செய்தனர். ஆங்கிலத்தில் போப் (Pope) என அழைக்கப்படும்.

அதேபோன்று, கத்தோலிக்க திருச்சபை என்றுதான் முன்னர் அழைக்கப்பட்டது. தற்போது கத்தோலிக்க திரு அவை என மாற்றப்பட்டுள்ளது.

திருத்தந்தை, கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இறந்தால், ”இறையடி சேர்ந்தார்”.என்பது செய்திக்குரிய மொழி (சாதாரண மனிதர்கள் இறந்தாலும், இறையடி சேர்ந்தார் என்று சொல்ல முடியும்)

ஆனால் சில பத்திரிகைகள்- சில செய்தி ஊடகங்கள் ”இறையடி சேர்ந்தார்” என்று எழுத விரும்புவதில்லை. அது அவர்களுடைய ஆசிரிய பீட (Editorial) கொள்கையாக இருக்கும்)

ஆகவே இவ்வாறான ஊடகங்கள் ”மரணமடைந்தார்” அல்லது ”உயிரிழந்தார்” என்று பயன்படுத்தினால் அதனை ஊடக ஒழுக்க விதிகளுக்கு மாறானது என்று அர்த்தப்படுத்த முடியாது.

இருந்தாலும், எந்த ஒரு சமயத்தவர்களும் தங்கள் ஆன்மீக தலைவர்கள் – பரிபாலகர் ஆகியோரை மரியாதைக்குரிய வார்த்தைகள் மூலம் அழைத்தால், அதற்குரிய பொருத்தமான வார்த்தைகளை செய்தியிலும் பயன்படுத்துவதுதான் நேர்மையான ஊடகப் பண்பாடு.

ஆகவே ”முரண்பாடுகள்” – ”விருப்பம் இல்லாமை” போன்றவற்றுக்கு அப்பால் செய்தி ஒன்றை எழுதும் போது ”புரிதல்” ”சமூகப் பெறுமதி” (Social Value) கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இது ஊடகப் பொதுப் பண்பாடு.

அதேபோன்று–

1) சவப் பேழை” என்று சொல்வதில்லை. ”திருவுடல் பேழை” என்பதே சரியானது.

2) இறுதிச் சடங்கு என்பதல்ல. இறுதி நல்லடக்க ஆராதனை என்பதே சரியானது.

3) புதிய திருத்தந்தை (பாப்பரசர்) தெரிவு செய்யப்படவுள்ளதை ”போட்டி” – ”போட்டியிடும் பட்டியல்” என்று சொல்வதில்லை. ”தெரிவு” – ”தெரிவுப் பட்டியல்” என்பதுதான் சரியானது.

உதாரணம் – சில பிரதான தமிழ் நாளிதழ்கள், பிரதான செய்தி இணைய ஊடகங்கள், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் புதிய திருத்தந்தைக்கான போட்டிப் பட்டியலில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கின்றன.

”போட்டிப் பட்டியல் அல்ல”- அது ”தெரிவுப் பட்டியல்”

திருத்தந்தை தெரிவுக்காக கர்தினால்களின் மாநாடு ஒன்று நடைபெறும். அதாவது ”கர்தினால்கள் கல்லூரி” (College of Cardinals) இங்கேதான் முறைப்படி தெரிவு இடம்பெறும்.

மாநாட்டில் ஒவ்வொரு கர்தினால்களும் வாக்களிப்பர். வாக்குகள் ஆய்வு செய்யப்படும். சமரச முறையும் உண்டு. இத் தெரிவு முறை, கட்சி அரசியல் தேர்தல்கள் போன்றதல்ல.

ஆகவே, ஒரு சமயத் தலைவரின் செய்திக்குரிய மொழிப் பயன்பாடுகள் தெரியவில்லை என்றால், அதனை உரியவர்களிடம் கேட்டு எழுதும் பண்பாடுதான் ஊடக அறம்.

அ.நிக்ஸன்

Share This