தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த நல்லூர் கந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருந்தாட தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூரான் சப்பரம்
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்ச திருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.