அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானம் லூயிஸ்வில்லிலிருந்து ஹொனலுலுவில் உள்ள டேனியல் கே. இனூயே சர்வதேச விமான நிலையத்திற்குச் புறப்பட்ட நிலையில், நேற்று (04), உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
புறப்பட்ட உடனேயே விமானத்தில் இயந்திர கோளாறு அல்லது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரக்கு விமானமான இதில் மூன்று விமானப் பணியாளர்கள் மட்டுமே இருந்ததாக UPS உறுதி செய்துள்ளது.
விமானம் தரையில் விழுந்தபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ ஒரு மைல் தூரத்திற்குப் பரவியது மற்றும் இதனால் கரும்புகை வானில் சூழ்ந்தது.
விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவித்தார்.
விபத்து நடந்த லூயிஸ்வில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் கியவை இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.
