
ஈராக்கியர்களுக்கு நன்றி – மொஜ்தபா கமெனியிடம் இருந்து வந்த அறிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்று வரும் போரின்போது ஆதரவளித்த ஈராக் மக்களுக்கு நன்றி தெரிவித்து, ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி எழுத்துப்பூர்வமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்தச் செய்தியில், “ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டிற்காகவும், நமது நாட்டிற்கு அவர்கள் அளித்த ஆதரவிற்காகவும் (ஈராக்கின்) உச்ச மத அதிகாரத்திற்கும் ஈராக் மக்களுக்கும் கமெனி தனது பாராட்டைத் தெரிவித்தார்,” என ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, ஷியா இஸ்லாத்தில் மிகவும் போற்றப்படும் நபர்களில் ஒருவரான, ஈராக்கைச் சேர்ந்த மதகுரு கிராண்ட் அயதுல்லா அலி சிஸ்தானியைக் குறிக்கிறது.
ஷியா அரசியல் கட்சியான ஈராக்கின் இஸ்லாமிய உச்ச மன்றத்திற்கும், பாக்தாத்தில் உள்ள ஈரானிய தூதருக்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தத் தகவல் எவ்வாறு அனுப்பப்பட்டது என்பது குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என AFP செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் மகனான கமெனி, பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது நடந்த வான்வழித் தாக்குதலில் தனது தந்தை கொல்லப்பட்டதை அடுத்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவெளியில் தோன்றவில்லை.
இதனால், அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து தீவிரமான யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து அவர் குணமடைந்து வருவதாக அரசு தொலைக்காட்சியும் சில ஈரானிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
பதவியேற்றதிலிருந்து, கமெனி பாரசீகப் புத்தாண்டான நவ்ரூஸைக் குறிக்கும் அறிக்கை உட்பட, ஒரு சில எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளார்.
அந்த இரு செய்திகளும் தொலைக்காட்சியில் மற்றொரு பேச்சாளரால் வாசிக்கப்பட்டிருந்தன. அரச ஊடகங்கள் கமேனியின் படங்களை வெளியிட்டுள்ளன, ஆனால் அவை சமீபத்தியவையா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் மொஜ்தபா கமெனி குறித்து சரியான தகவல் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அவர் உயிருடன் உள்ளாரா? அல்லது இறந்துவிட்டாரா என்பது தெரியாது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் உயர்மட்ட நபருடன் ஈடுபட்டு வருவதாக கடந்த வாரம் டிரம்ப் கூறினார், ஆனால் அவர் ஈரானின் உச்ச தலைவர் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானின் மூன்றாவது உச்சத் தலைவரான மொஜ்தபா கமெனி, தனது தந்தை மற்றும் புரட்சியின் ஸ்தாபகத் தலைவரான அயதுல்லா ரூஹோல்லா கொமேனி ஆகிய இருவருக்கும் பிறகு இந்தப் பதவியைப் பெற்றுள்ளார்.
