மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

பத்துமலை முருகன் கோவிலில் 135வது ஆண்டாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருநாள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.

மலேசியாவில் மிகவும் பிரபலமான கோவிலாகவும் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்கும் பத்து மலை முருகன் கோவிலில் தைப்பூச திருநாள் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது.

மலை மேல் அமைந்துள்ள குகைக் கோவிலுக்கு 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். தைப்பூசத்தையொட்டி, இந்தப் படிகள் அறவே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேலான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் தொடர்ந்து ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்ற முழக்கம் எழுப்பி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த தைப்பூச கொண்டாட்டத்தில் பக்தர்கள் காவடி, பால்குடம், வாயில் அலகு குத்துதல், முதுகில் அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடனை செலுத்தி பத்து மலை முருகனை தரிசிக்கிறார்கள்.

Share This