டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதி போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தொடர் முழுவதும் அதிகளவாக ரசிகர்கள் கூடியிருந்ததுடன், இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
தற்போது, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவருக்கொருவர் இரண்டு முறை விளையாடுகின்றன.
ஆனால் டெஸ்ட் போட்டியை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தை பலனளித்தால், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு முறை விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் அவுஸ்திரேலியா தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைவர் ரிச்சர்ட் தாம்ப்சன் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை செயல்பாட்டுக்கு வராது என கூறப்படுகின்றது.
அந்த வகையில், 2027ஆம் ஆண்டு வரை பல்வேறு நாடுகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
இதேஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் போட்டி நடைபெற இருக்கிறது.
உலகில் முன்னணியில் உள்ள அணிகள் அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்தர பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றலம் என கூறப்படுகின்றது.
அதேபோல், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இரண்டாம்கட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தது.
இத்தகைய திட்டம், எங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்று சிறிய நாடுகளை சேர்ந்த அணிகள் முறையிட்டதால், இந்த திட்டம் பேச்சுவார்த்தை கட்டத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது.