இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிக தடை

நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைகளை ஆடியோ, காணொளி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட இழிவான மற்றும் அவமதிக்கும் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சார்ட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
அதன்படி, நாளை (20) முதல் மே 8ஆம் திகதி வரை நடைபெறும் 8 நாள் நாடாளுமன்ற அமர்வுகளில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் அறிக்கைகளைப் பதிவு செய்வதை நிறுத்தி வைப்பது அமல்படுத்தப்படும்.
அந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக இடைநீக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் மேலும் பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.