தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு – பிமல் ரத்நாயக்க

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு – பிமல் ரத்நாயக்க

வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்கத்தினால் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தெரிவிக்கும் வகையில் செயற்பட்டால் மத மோதல்களே ஏற்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டி திஸ்ஸ விகாரை உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

”பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நீதியமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அது தொடர்பில் ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடுவதை போன்று இந்த விடயத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தால் அது மத மோதல்களையே ஏற்படுத்தும்.

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்குரிய சிறந்த தீர்வு ஓரிரு வாரங்களில் முன்வைக்கப்படும். எமக்கு எதிராக பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு பெற்றுக்கொடுத்து வருகிறோம். சுவிட்சர்லாந்தின் பெடரல் பற்றி பேசிப் பயனில்லை. சகல பிரச்சினைகளுக்கும் இங்கிருந்தவாறு தான் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதனை மறந்து விடக்கூடாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This