Tan Tea தோட்டத் தொழிலாளர் விவகாரம் – தமிழக பிரதிநிதி, இ.தொ.கா. இடையில் கலந்துரையாடல்

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை நேற்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் Tan Tea நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற மலையக தோட்ட தொழிலாளர்கள் அகற்றப்பட்ட போது, இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் அவர்கள் மீண்டும் அதே இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டதுடன், அவர்களுக்கான வீட்டுத்திட்டம் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக செல்வராஜ், செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இ.தொ.கா தலைவர் கடந்த காலத்தில் தமிழக முதலமைச்சர், கேரளா முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் வனத்துறையினரால் Tantea க்கு வழங்கப்பட்ட குத்தகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை நீலகிரிக்கு வருகை தந்து வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தோட்ட தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்வதற்கு 2 ஏக்கர் தோட்ட தொழிலாளர்களின் பெயரில் பெற்றுத்தருமாறு செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இது குறித்து செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் இந்திய அரசிடமும் தமிழக முதலமைச்சரிடமும் கலந்துரையாடி, தோட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்களை மீண்டும் அதே தோட்டத்தில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எதிர்காலத்திலும் இந்திய அரசாங்கத்திடமும், தமிழக அரசிடமும் இது குறித்து கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.
மேலும் இது குறித்து இந்திய தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக செந்தில் தொண்டமான் உறுதியளித்தார்.