பொலிஸார் கேட்ட மாணவர்களின் பெயர் விபரங்களை வழங்க தமிழ் ஆசிரியர் மறுப்பு

பொலிஸார் கேட்ட மாணவர்களின் பெயர் விபரங்களை வழங்க தமிழ் ஆசிரியர் மறுப்பு
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளனர்.

கடந்த வருடம் கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பில், பாடசாலையின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவினரால் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சுமார் 8 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம் இருந்து 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வாய்மூலமாகப் பெறப்பட்ட பதில் தொடர்பில் மேலும் விசாரிப்பதற்காக 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01 இல் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் டி.கனகராஜுக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவரது தலையீட்டினை அடுத்து, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், பரந்தன் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆசிரியருக்கு வாய்ப்பளித்தனர்.

இதற்கமைய, மார்ச் 3ஆம் திகதி காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்ததாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தெரிவித்தார்.

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

2025ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி, இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின்போது ஈழம் வரைபடம் மற்றும் கனகபுரம் மயானத்தின் வாயிலின் மாதிரியை உருவாக்க உதவிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்துமாறு அதிகாரிகள் ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் ஆசிரியர் அந்த தகவல்களை வழங்க வழமைப்போல் மறுத்துள்ளார்.

அவரது வெளிச் செயற்பாடுகள் மற்றும் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாத பொலிஸார் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக மாகாண ஊடகவியலாளர்களிடம் ஆசிரியர் தெரிவித்தார்.

“என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ஒரு வருடமாக என்னிடம் விசாரணை நடத்துகிறீர்கள். ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள்? தமிழர்கள் என்ற காரணத்தினாலா?” என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஆசிரியர் கேட்டபோது, உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த உத்தரவுக்கு அமைய இந்த விசாரணையை நடத்துவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“முல்லைத்தீவையும் கிளிநொச்சியையும் காட்டுவது குற்றமென்று, பயங்கரவாதம் என்று உங்கள் சட்ட புத்தகத்தில் இருக்கின்றதா? என தான் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் குறிப்பிட்டுள்ளார்.

“இது விடுதலைப் புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசம்” என அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் ஆசிரியர் கூறியுள்ளார்.

“அவர்கள் அதனை  செய்திருக்கலாம். ஆனால் இது எங்கள் மண். நாங்கள் வாழும் பிரதேசத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர் அது தவறில்லை என சுட்டிக்காட்டினேன்.” என ஆசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, இதுத் தொடர்பில் கடந்த காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இதுத் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

2024ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு தன்னை அழைத்த அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் சுட்டிக்காட்டுகின்றார்.

விசாரணையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர்,  இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின்போது இலங்கையின் வரைபடத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் வகையில் இல்லத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறெனினும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வழங்க அவர் கடுமையாக மறுத்திருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 2025 ஜனவரி 21ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

“அதேபோல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல, ஆனால் புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் சட்ட மூலத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.”

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு பல முறை அழைக்கப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This