எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம்

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம்

பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் இருக்கின்றனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் கடந்த கால அரசாங்கங்களை போன்று புதிய அரசாங்கமும் அதேவேளையைத் தான் செய்யப் போகின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

ஜெனிவா அமர்வில் காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருந்தாலும், அவை அனைத்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொறிமுறையாகும்.

வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியல் அமைப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். ஆனால் புதிய அரசியல் அமைப்பு பற்றி இன்று வரை ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.

புதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் என்ன கூறப் போகின்றீர்கள் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். பொறுப்பு கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் பொறுப்பு கூறல் என்பது மிக பிரதானமான விடயம். இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் வெளிவிவகார அமைச்சர் சொல்லவில்லை.

இதற்கான பதிலடியை எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு தருவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share This