2026இல் தமிழரா? திராவிடரா? தி.மு.க.வுக்கு சீமான் சவால்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப். 28ஆம் திகதி (இன்று) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் பொலிஸார் நேற்று பிற்பகல் சீமான் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது, சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ், பொலிஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
துப்பாக்கி பறிமுதல்: இதையடுத்து, அமல்ராஜை பொலிஸார் கைது செய்ய முயன்றதால், அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று, காவல் துறை ஜீப்பில் ஏற்றினர்.
இதற்கிடையில், பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து பொலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கயல்விழி முறையீடு: இந்த சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினர், பொலிஸார் அத்துமீறி நுழைந்ததாகப் புகார் தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அமல்ராஜின் மனைவி கூறும்போது, “25 ஆண்டுகளாக எனது கணவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தார். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சீமானிடம் பணிபுரிந்து வருகிறார். அவர் போலீஸாரை தாக்கவில்லை. அவர்கள்தான் எனது கணவரை தாக்கினர். மேலும், போலீஸாரிடம் துப்பாக்கியை ஒப்படைக்கவே முயன்றார். அவரை கிரிமினல் குற்றவாளி போல இழுத்துச் சென்றது நியாயமா?” என்றார்.
சீமான் வழக்கறிஞர் ரூபன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சீமான் வீட்டில் பெற்றோல் குண்டு வீசுவதாக மிரட்டல் வந்ததால்தான், பாதுகாவலர் துப்பாக்கி வைத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காகத்தான் சீமானுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என்றார்.
சீமான் வழக்கறிஞர் சங்கர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த கடிதத்தில், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. வெளியூர் நிகழ்ச்சிகளில் சீமான் பங்கேற்றதால்தான் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை” என்றார்.
கட்டாயப்படுத்தினால் ஆஜராக மாட்டேன் என்ன செய்ய முடியும்? – சீமான் கேள்வி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: என் மீது நடிகை தெரிவித்த புகார் குறித்து, நான்தான் வழக்கு தொடர்ந்தேன். இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அந்த நடிகை வெளியே வரவில்லை. திமுகவால் என்னை சமாளிக்க முடியவில்லை என்பதால், இந்த விவகாரத்தை பரபரப்பாக்கி உள்ளனர். நான் உடனடியாக ஆஜராக வேண்டிய அவசியம் என்ன?
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (நேற்று) விசாரணைக்கு என்னால் வர முடியாது. சென்னை வந்த பிறகு காவல் நிலையம் வருகிறேன் என்று கூறினேன். நான் ஓசூரில் இருப்பது போலீஸாருக்குத் தெரியும். ஆனாலும் என் வீட்டில் சம்மன் ஒட்டி அவமானப்படுத்த முயல்கின்றனர். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவேன். ஆனால், கட்டாயப்படுத்தினால் என்னால் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது. என்னை என்ன செய்துவிட முடியும். இவ்வாறு சீமான் கூறினார்.
2026-ல் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோமா? – தி.மு.க.-வுக்கு சீமான் சவால்
என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:-
* 234 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளரை போட முடியுமா?
* 2026 தேர்தலில் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோம்.
* பல ஆண்டுகளை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. கட்சி ஓட்டு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க தயாரா?
* என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
* அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
* காவல் ஆய்வாளரின் தந்தை ராஜீவ் கொலையின் போது இறந்ததற்கு எதுவும் செய்ய முடியாது.
* முதன் முதலில் இந்தி பள்ளியை தமிழகத்தில் திறந்தவர் பெரியார்.
* தமிழ்நாட்டில் அதிக வழக்குகளை எதிர்கொள்ளும் தலைவராக நான் இருக்கிறேன். 230 வழக்குகளை கடந்து விட்டேன்.
* எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சுபவன் நான் அல்ல, எல்லா வழக்குகளையும் எதிர்கொள்ளத் தயார் என்றார்.