
இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் இந்தி பேசும் மாநிலமாகி இருக்கும் – திருமாவளவன்
தமிழ்நாட்டில் திராவிடம் இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், நாம் அனைவரும் இந்தி பேசக்கூடிய இந்திவாலாக்களாக மாறி இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்ற பெயரில் ஜனவரி 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பங்கேற்று தொடங்கி வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மட்டும் வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் புகைப்படம் இடம்பெற்றதால் புறக்கணித்தது.
இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், வைகோவின் கொள்கை உறுதிப்பாட்டின் சான்றாக இந்த சமத்துவ நடைபயணம் அமைந்துள்ளது. இதுவரை 10 முறை நடைபயணம் மேற்கொண்ட ஒரே தலைவர் வைகோ தான். தமிழ்நாட்டில் 6 ஆயிரம் கிமீ நடைபயணம் மூலமாக சென்றிருக்கிறார். சமத்துவத்திற்காக போராட கூடிய அனைவரும் இணைந்து இந்த பயணத்தில் நடக்க வேண்டும்.
பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் போராடியதும், அரசியல் செய்ததும் சமத்துவதற்காக தான். இங்குள்ள அனைவரின் நோக்கமும், இறுதி இலக்கும் சமத்துவம் தான். நமது கூட்டணி சமத்துவத்திற்கான கூட்டணி. நமக்கு எதிராக களத்தில் இருப்பவர்கள் சனாதன சக்திகள்.. பாகுபாடுகள் இங்கு நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்.
ஒருபுறம் சனாதன சக்திகள் இருக்கிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகளான நாம், இங்கு திமுக தலைமையில் இருக்கிறோம். 2026ல் நடக்கும் தேர்தல் சமத்துவத்திற்கும், சனாதத்திற்கும் இடையிலான யுத்தம். இது வழக்கமான சராசரியான தேர்தல் இல்லை. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் சனாதன சக்திகள் ஒருபுறம் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு துணையாக முகமூடிகளை அணிந்து கொண்டு தமிழ் தேசியம், திராவிடம் பேசுவதாக திரிபுவாத அரசியலை முன்னெடுத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதனை உணர்ந்துதான் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி இணக்கமாக இருக்கிறோம்.
இன்று தமிழ் என்று பேசுகிறோம் என்றால், அது திராவிடத்தால் தான் உயிர்ப்போடு இருக்கிறது. திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கோ, தமிழுக்கோ, தமிழகனுக்கோ எதிரானது அல்ல. இந்தி திணிப்பை தடுத்தது தான் திராவிடம்.. திராவிடம் இந்தியை தடுக்காமல் இருந்திருந்தால், நாம் எல்லோரும் இந்தி பேசக்கூடிய இந்திவாலாக்களாக மாறி இருப்போம்.
கடந்த 40,50 ஆண்டுகளில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றாக மாறி இருப்போம்.. தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்தது பெரியார்.. பரப்பியவர் அண்ணா.. கட்டிக்காத்தது கருணாநிதி.. தற்போது முன்னெடுத்து செல்வது ஸ்டாலின்.. இந்த நடைபயணத்தை திராவிட நடைபயணம் என்றே சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
