தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு : தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்து

தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு : தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்து

இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ , தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான சி.வி விக்னேஷ்வரன் தீர்மானம் நிறைவேற்றினார்.

அத்துடன், தமிழக சட்டமன்றத்தில், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை இந்திய அரசும், உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள்.

இந்தப் பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள அத்துமீறிய குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )