ஜனாதிபதியுடன் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பேச்சு நடத்தத் தயார்

ஜனாதிபதியுடன் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பேச்சு நடத்தத் தயார்

நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தமது குழுவிடம் தெரிவித்ததாக சபையில் குறிப்பிட்ட அவர், அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியலமைப்புக்கு இணங்க அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை ஜனாதிபதிக்கு நாம் இந்த சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளோம்.

ஜனாதிபதியும் நாம் தெரிவித்த விடயங்களைப் பொறுமையாக செவிமடுத்தார்.

நாட்டில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

வலு சக்தித் துறை முக்கியமானது. இந்த சேவைகளில் ஏற்பட்ட நெருக்கடியால் தான் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்த துறையைப் பலப்படுத்த விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதேவேளை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS
Share This