தமிழ்நாடு முழுவதும் கோலாகலம்: தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை ‘களை’ கட்டியது

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடந்த வாரம் இந்த விற்பனை சூடு பிடித்தது. ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.
இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து பட்டாசு விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் பட்டாசு விற்பனை கடைகளுக்கு தீயணைப்பு துறையினர் தற்காலிக அனுமதி வழங்கி உள்ளனர். இன்று முதல் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.
அதுபோல தீபாவளி தினத்தன்று பயன்படுத்தவும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இனிப்பு வகைகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையில் இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இன்று இனிப்பு கடைகளில் பார்சல், பார்சலாக இனிப்புகள் விற்பனையானது.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இனிப்பு கடைகளில் இருந்து சென்னைக்கு லாரி, லாரியாக இனிப்புகள் கொண்டு வரப்பட்டன. அந்த இனிப்புகளும் இன்று ஒரே நாளில் விற்று தீர்ந்தன.
தீபாவளியை முன்னிட்டு அசைவ பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனையும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன் காரணமாக தீபாவளி உற்சாகம் இன்றே மக்கள் மனதில் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து இன்று மதியம் வரை சுமார் 15 லட்சம் பேர் பஸ்கள், ரெயில்கள், தனியார் வாகனங்கள், சொந்த வாகனங்களில் சென்று இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இதே போன்று தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் இன்று சாலை பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டின் முக்கிய சாலைகளில் இன்று வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டதை காண முடிந்தது. பல இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில கிலோ மீட்டர்களை கடந்து செல்வதற்கு 3 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜவுளி கடைகளில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக வந்து புதிய துணிகளை ஆர்வமுடன் வாங்கினார்கள். இதனால் ஜவுளி கடைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
ஜவுளி கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டது. இதனால் அந்த பகுதிகளில் நீண்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாடி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பிராட்வே, தாம்பரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை, கூடுவாஞ்சேரி பகுதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் இன்று காலை அலைமோதியது. சென்னை புறநகர் பகுதி மக்கள் மற்ற இடங்களுக்கு ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க படையெடுத்ததால் இன்று இறுதிக்கட்ட விற்பனை அமோகமாக நடந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அலைஅலையாக சென்னைக்குள் திரண்டு வந்தனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
பக்கத்து மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சென்னைக்கு வந்து இருந்தனர். அவர்கள் ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள், பாத்திரங்கள், நகைகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். இதனால் புறநகர் செல்லும் ரெயில்கள், பஸ்கள் நிரம்பி வழிந்தன.
இன்று பிற்பகல் 4 மணிக்கு பிறகு சென்னை நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கடல் அலைபோல் திரளக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை முக்கிய பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து அதிகரித்து இருப்பதால் இன்று மதியம் முதல் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. மின்சார ரெயில்கள் நிரம்பி வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும் போக்குவரத்து போலீசார் இரவு-பகலாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை பட்டாசு மற்றும் இனிப்பு விற்பனை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.