
தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் தமிழக அரசை பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் நேற்று விமர்சனம் செய்தார்.
சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்பிடிப்பதாக அவர் சாடினார்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தை மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் நேற்று எழுப்பினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் ஒரு மாநிலம் சனாதன விரோத நிலைப்பாட்டின் அடையாளமாக மாறியுள்ள ஒரு முக்கியப் பிரச்சினையை நான் இங்கு எழுப்ப விரும்புகிறேன். அம்மாநில அமைச்சர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசி வருகின்றனர். கோயிலுக்குள் நுழைய நீதிமன்ற தலையீட்டை நாட வேண்டிய கட்டாயம் பக்தர்களுக்கு ஏற்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணித்ததாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தின் போது பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்துக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்துக்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்? இவ்வாறு அனுராக் தாக்குர் பேசினார்.
