மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
புதுடில்லியில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக நேற்று வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.
டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், தற்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(டிச. 28) முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்று மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, மன்மோகன் சிங் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, மன்மோகன் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
‘இந்தியாவின் பிரதமராக இருந்து பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்தவர் மன்மோகன் சிங் என்று நாட்டிற்கே தெரியும். அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே பேரிழப்பு. குறிப்பாக தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவர துணை நின்றவர்.
மதுரவாயல் திட்டம், சாலைகள் வசதி, 100 நாள் வேலைத்திட்டம், செம்மொழித் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், சேது சமுத்திரத் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்ததற்கு அவரின் பங்கு முக்கியமானது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நட்புறவுடன் இருந்தவர். அவர் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது’ என்று கூறினார்.