தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி

தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண தடை விதிக்கப்பட்ட முத்தஹிதா பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு போரவை அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
முத்தஹிதா காத்ரி இந்த மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். எவ்வாறாயினும், ஆப்கான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காமல் தலிபான் வெளியுறவு அமைச்சரை இந்தியா வரவேற்கிறது.
இதனிடையே, தலிபான் வெளியுறவு அமைச்சர் மீதான பயணத் தடையை நீக்குமாறு இந்தியா ஐ.நா.விடம் கோரியதா என்ற கேள்விக்கு ஜெய்ஸ்வால் பதிலளிக்கவில்லை.
தலிபான் தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் அணுகுமுறை மாறிவிட்டதா என்று கேள்வியெழுப்பிய போது, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு போருக்காக இந்தியா ட்ரோன்களை அனுப்புவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, இஸ்ரேல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
காசா நோக்கிச் செல்லும் கடற்படையில் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கேட்டபோது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த பதிலை மீண்டும் கூறினார்.