ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார் சிரியா ஜனாதிபதி
நாட்டில் இருந்து தப்பிச் சென்ற சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களுடன் தூதரகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், நாட்டில் உள்ள ரஷ்ய இராணுவத் தளங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அசாத் பயணித்த விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் வாதங்கள் எழுந்துள்ளன.
டமாஸ்கஸில் இருந்து புறப்பட்ட கடைசி விமானம் சிரியன் ஏர் 9218, இலியுஷின்-76 என்று விமான கண்காணிப்பு இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விமானத்தில் அசாத் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், டமாஸ்கஸ் விமான நிலையத்தை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றுவதற்கு சற்று முன் கடைசி விமானம் புறப்பட்டுள்ளது.
முதலில் கிழக்கு நோக்கிச் சென்ற விமானம், பாதையை விட்டு விலகி வடக்கு நோக்கிச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் ஹோம்ஸ் நகரின் மீது விமானம் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையிலேயே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் இதுதொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,
“அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மொஸ்கோ வந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என எப்போதும் ரஷ்யா வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், ஐ.நா. மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டு, இரத்தம் சிந்தாத புரட்சியில் எதிர்க்கட்சிப் படையான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (எச்டிஎஸ்) ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் மூலம் சிரியாவில் அசாத் குடும்பத்தின் 53 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
அரசாங்க நிறுவனங்களின் கட்டுப்பாடு புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் வரை தற்போதைய பிரதமர் முகமது காசி அல் ஜலாலி மேற்பார்வையிடுவார் என்று ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இன் கமாண்டர் அபு முகமது அல் ஜௌலானி தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்தவர்களை எதிர்க்கட்சியினர் விடுவித்தனர். அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அறிவித்துள்ளது.
2011 எழுச்சியில் இருந்து தப்பித்து ஆட்சியில் இருந்த அசாத், திடீர் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இயக்கத்தைத் தாங்க முடியவில்லை. கடந்த நவம்பர் 27ஆம் திகதி ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அரசாங்கப் படைகளுக்கு எதிராக ஒரு எதிர்பாராத போரை தொடங்கியது.
நாட்டின் இரண்டாவது நகரமான அலெப்போ மூன்றே நாட்களில் கைப்பற்றப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹிம்ஸைக் கைப்பற்றிய பின்னர் எதிர்க்கட்சிப் படைகள் டமாஸ்கஸ் நோக்கி நகர்ந்தன.
முக்கிய நகரங்களிலிருந்து அரசாங்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதன் மூலம், இரத்தம் சிந்தாமல் அரசாங்கம் கைப்பற்றப்பட்டது.
2018 ஆம் ஆண்டு டமாஸ்கஸ் நகரின் முழுக் கட்டுப்பாட்டை அரசுப் படைகள் மீட்ட பிறகு, எதிர்க்கட்சிப் படைகள் இங்கு வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.