சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் “ஒத்துழைக்க” தயார் என்று அறிவித்துள்ளார்.
அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப சிரியா ஒரு “சாதாரண நாடாக” இருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “ஆனால் இந்த பிரச்சினை சிரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமையையும் சார்ந்தது.
நாங்கள் அதனுடன் (அந்த தலைமை) ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். சாத்தியமான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தாருங்கள்” என்று ஜலாலி தனது முகநூல் கணக்கில் தெரிவித்துள்ளார்.
மேலும் கிளர்ச்சியாளர்கள் வானத்தை நோக்கி சுடுவதையும் அவர் தடை செய்தார்.
டமாஸ்கஸிலிருந்து அசாத் தப்பியோட்டம்
கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அசாத் நாட்டை விட்டு வெளியேறதை அறிவித்தனர். அத்துடன், வெளிநாட்டில் வசிக்கும் நாட்டின் குடிமக்கள் “சுதந்திர சிரியாவிற்கு” திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
“கொடுங்கோலன் அசாத்” தப்பி ஓடிவிட்டதாகவும், “டமாஸ்கஸ் நகரத்தை நாங்கள் சுதந்திரமாக அறிவிக்கிறோம்” என்றும் டெலிகிராமில் கிளர்ச்சிப் பிரிவுகள் தெரிவித்தன.
“பாத் ஆட்சியின் கீழ் 50 ஆண்டுகால அடக்குமுறை, 13 வருட குற்றங்கள், கொடுங்கோன்மை மற்றும் (கட்டாய) இடப்பெயர்ச்சிக்குப் பிறகு இந்த இருண்ட காலத்தின் முடிவுடன் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை நாங்கள் இன்று அறிவிக்கிறோம்,” என்று கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
சிரியாவின் நிலைமையை கண்காணிக்கும் பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சிரியாவில் நடக்கும் “அசாதாரண நிகழ்வுகளை” கண்காணித்து வருகிறார் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் கூறியுள்ளது
“ஜனாதிபதி பைடன் மற்றும் அவரது குழுவினர் சிரியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் மற்றும் பிராந்திய பங்காளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” என்று தேசிய பாதுகாப்பு பேரவையின் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் குறிப்பிட்டுள்ளார்.