
சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு
சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிதாரி நவீத் அக்ரம் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில், மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும் இரண்டு இஸ்லாமிய அரசு கொடிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்ட தந்தையும் மகனும் கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் பயணம் செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் ஏன் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
போண்டி கடற்கரையில் ஹனுக்காவைக் கொண்டாடிய யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இதில் 50 வயதான தந்தை பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும், 24 வயதான நவீத் அக்ரம் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் இன்னும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த தாக்குதலில் 42 பேர் காயணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
