
வத்தளையில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
வத்தளையில் சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இந்த போதைப்பொருட்களை பெற்று மற்றொரு நபர் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்து, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
வத்தளையைச் சேர்ந்த 34 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சுமார் 20 பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், அவரிடமிருந்து 4,900 அமெரிக்க டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் இன்று வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
