பாகிஸ்தான் இராணுவ தளத்தின் மீது தற்கொலை தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர், தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வைத்தியசாலையை மேற்கோள்காட்சி செய்திகள் வெளியாகியுள்ளன.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபானுடன் தொடர்புடைய ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பல இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், இராணுவம் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் பன்னு மாவட்ட வைத்தியசாலை குறைந்தது ஒரு 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளது.
பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகளும் தங்களை வெடிக்கச் செய்ததாக, பெயர் தெரியாத நிலையில் ஒரு பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
“சுவரில் ஏற்பட்ட உடைப்புக்குப் பிறகு, ஐந்து முதல் ஆறு தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைய முயன்றனர், ஆனால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்,” என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தாக்குதல் நடந்தது, அப்போது முஸ்லிம் புனித ரமலான் மாதத்தில் மக்கள் தங்கள் நோன்பை முடித்துக் கொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை ரமலான் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தீவிரவாத தாக்குதலான இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-ஃபர்சான் பொறுப்பேற்றுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்கள்தான் குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் என்று அந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் குழந்தைகள் என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் வசித்து வந்தனர்.
மாலை நேர குண்டுவெடிப்புகளில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்ததாக பன்னு மாவட்ட மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முகமது நோமன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.