உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் கலந்துரையாடல்

உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டது.
இந்த உப குழு கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர சேனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இயலாமையுள்ள மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்குத் தேவையான கொள்கையைத் தயாரிப்பது தொடர்பில் உப குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்தக் கொள்கையின் வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, அந்த வரைவு பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், தேசிய மட்டத்தில் சாதனைகளைப் படைக்கும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளை தொழிற் சந்தையில் நிலைநிறுத்துவது குறித்தும் குழு, பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. குறிப்பாக, வெளிவாரிப் பட்டங்களின் தரம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றின் தரத்தை நிலையான முறையில் பேணுவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பல்கலைக்கழகங்களின் தற்போதைய தேவைக்கேற்ப கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் உயர் கல்வித் பிரிவு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடப்படவுள்ளது.
இந்த உப குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் உபாலி பண்ணிலகே, கௌரவ பாராளுமன்ற
உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நிமல் பலிஹேன மற்றும் மஞ்சுள சுகத் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.