மாணவி தற்கொலை – எமது அமைப்பாளருக்கு தொடர்பில்லை – லக்ஷ்மன் நிபுணாராச்சி

மாணவி தற்கொலை – எமது அமைப்பாளருக்கு தொடர்பில்லை – லக்ஷ்மன் நிபுணாராச்சி

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி திரிபுபடுத்தப்பட்டதாகும். அவர் இதில் சம்பந்தப்பட்டவில்லையென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்தார்

கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால் நேற்று வெள்ளிக்கிழமை (9) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் போது,

பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் இந்த சபையில் நாங்கள் கதைத்தோம். 2024 ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்திலேயே பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் 2025 ஜனவரி மாதத்திலேயே கைது செய்யப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர் இரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கப்படுகின்றார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் 8 ஆம் திகதியே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்ட பின்னரே இந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இந்த 5 மாதங்களாக என்ன செய்தது கல்வி அமைச்சு, பிரதமர் கல்வி அமைச்சராக பதவியேற்று 6 மாதங்களாகியும் ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி கிடைக்காத காரணதத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

உங்கள் கட்சி அமைப்பாளர் ஒருவருக்கு இதில் குற்றச்சாட்டு முன்வைவக்கப்பட்டுள்ளதாக நிபுணாராச்சி எம்.பி உரையாற்றுகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டு சும்மா தெரிவிக்கப்படவில்லை. மாணவியின் பெற்றோர் அது தொடர்பில் கூறுகின்றனர். குறித்த நபரே வகுப்பரையில் அந்த மாணவியை நிற்கவைத்து, பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் மற்றைய மாணவர்களின் முன்னால் மாணவியை அவமதித்துள்ளார். அவர் உங்களின் கட்சியின் அமைப்பாளர் என்று நாங்கள் காலையில் கூறவில்லை. நீங்களே இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கூறினீர்கள்.

குறித்த ஆசிரியர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முறைமை எப்படி இருந்திருக்கிறது என்பதனை பாருங்கள். அந்த செயற்பாட்டு முறை வேகமானதான இருந்திருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் 7 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு இப்படி பாதுகாப்பு கொடுப்பதா? சிறுமியின் மரணத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பு கூற வேண்டியவரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? அவர் வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் இன்று சிறையில் இருந்திருப்பார்.

அவர் மறைமுகமாகவோ, நேரடியாகவோ இந்த மாணவியை அவமதிப்பு செய்துள்ளதாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைப்பாளர் மட்டுமல்ல கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர். 35ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளில் தீர்மானிக்கப்படும்.

மக்கள் அரசாங்கத்திடம் முறைமை மாற்றம் தொடர்பிலேயே எதிர்பார்த்தனர். இதனையே நீங்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவானதாக இருக்கிறது என்றார்.

இதன்போது முஜிபுர் ரஹ்மான் எம்.பி. முன்வைத்த சில விடயங்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி பதிலளித்த ஆளும் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி எம்.பி. கூறுகையில்,

இந்த விடயத்தை இவர்கள் அரசியல் செய்யப் போவதில்லை என்று கூறிக்கொண்டே எமது அமைப்பாளர் ஒருவரை இதனுள் சம்பந்தப்படுத்துகின்றனர். எமது அமைப்பாளர் இதற்குள் கிடையாது. அவர் குறித்த கல்வியகத்தின் உரிமையாளரே, அவர் ஆசிரியரும் கிடையாது. முழுமையாக திரிபுபடுத்தலையே செய்கின்றனர். திரிபுபடுத்தியே ஊடகங்களுக்கு கூறுகின்றனர்.

அந்த பிள்ளை தொடர்பான கவலை எங்களிடையே இருக்கிறது. பிரதமரும் இது தொடர்பில் கூறியுள்ளார். தவறுகள் மற்றும் தாமதங்கள் இருந்தால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share This