‘மலையகத்தில் மாடி வீடு’ – அமைச்சர் சொல்வதா, அமைச்சின் செயலாளர் சொல்வதா உண்மை?

மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில், தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார். அரசாங்கத்துக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பது மக்களை குழப்பமடைய செய்திருக்கிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கிராமமாக மாற்றுவது தொடர்பில் கடந்த காலங்களில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி பங்களிப்புடனும் ஆயிரக்கணக்கான தனி வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வீடுகளுக்கான காணி உறுதி பத்திரங்களை வழங்குவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தயாரித்து முடிவுறுத்தப்பட்ட காணிகளுக்கான உறுதி பத்திரங்களை பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் வழங்கி வைத்திருக்கிறார்.
தற்போதைய அரசாங்க காலத்திலும் நாம் முன்னெடுத்த காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். 200 வருடங்கள் இந்த நாட்டுக்காக அர்ப்பணித்த தொழிலாளர் சமூகத்துக்கு வீடு அமைப்பதற்கு காணி வழங்குவதற்கு அரசாங்கம் தற்போது பின்னடிப்பதாக தெரிகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்பதற்கு காணித் துண்டுகள் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட் கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் அதற்கு முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில் அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் பொதுவான கருத்து நிலைபாடு இல்லை. அவ்வாறெனில் பிரதி அமைச்சருக்கு தெரியாமல் அரசாங்கம் செயலாளர் மட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஏற்கனவே, தோட்டங்களில் மாடி வீடு திட்டங்களை அமைக்கப்படுத்துவதை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் அதை மீண்டும் திணிப்பதற்கு முற்படக்கூடாது. ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதியின் படி தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக தேயிலை பயிரிடப்படாமல் கைவிட்ட காணிகள் ஏராளமாக இருக்கின்றன என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.