புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்

புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்

பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (23) காலை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. எனவே, கல்வித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மீளாய்வின் ஊடாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு 2026 முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் சரியான முறையில் திருத்துவதைத் தவிர அவற்றை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்த எந்த எண்ணமும் எமக்கு இல்லை. இந்த பாடங்கள் கல்வித் துறையில் இருக்க வேண்டும் என்றே நாம் நினைக்கின்றோம்.

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தயாராகி வருகின்றோம்.

ஆசிரியர் பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்த நாம் எதிர்பார்க்கிறோம். பாடசாலைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் பாடசாலைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் மற்றும் பாடசாலை பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலைக்குள் நுழையும் ஒரு பிள்ளைக்கு உலகளாவிய கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

கல்வி சீர்திருத்த முன்மொழிவுகள் மூலம் பாடத்திட்டம் திருத்தப்படுகிறது. அதற்கேற்ப, பாடசாலை மாணவர்கள் கற்கின்ற பாடங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் வகையிலேயே பாடத்திட்டத்தை திருத்தி வருகிறோம். பரீட்சையை மையப்படுத்திய முறையை விட பிள்ளைகளுக்கு பாரமாக இல்லாத நடைமுறைக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

உயர் கல்வியைப் பொறுத்தவரை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி ஆகிய துறைகளில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முயற்சிக்கிறோம். அங்கு, நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் தொழில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

அளவுகோல்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 7 இலட்சம் பாடசாலை பிள்ளைகளுக்கு காலணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இடைநிறுத்தப்பட்டுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

Share This