மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு வீடுகள் – வருட இறுதியில் கையளிக்க நடவடிக்கை

தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அப்புத்தளை பூனாகலை பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இந்த வருட இறுதியில் வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவவுள்ளன. மேற்படி மண்சரிவு ஏற்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேல் காலம் கழிந்துள்ளன.எனினும், கடந்த அரசாங்கம் இம்மக்களின் விடயத்தில் கவனம் செலுத்தியிருக்கவில்லை.இந்நிலையிலே, இந்த மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கென 160 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் ஊவா மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட தற்போதைய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்தா வித்யாரத்ன, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல், ரவீந்திர பண்டார உள்ளிட்டவர்களின் அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளால் ஒரு வருடத்துக்கும் குறைந்த மிகக் குறுகிய காலத்தில், இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
மொத்தமாக பூனாகலையில் 52 வீடுகள் கட்டப்படுகின்றன. அரைவாசிக்கும் மேற்பட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இராணுவத்தினரால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மண் சரிவினால் பாதிக்கப்பட்டு.
இரண்டரை வருடங்களுக்கு மேலாக தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் அகதிகள் போல் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வந்த மக்கள், இந்த புதிய வீட்டு திட்டத்திற்காக அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
தோட்ட லயன் வீடுகளில் வாழ்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கத்தின் வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி வீடுகள், மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும் வீடுகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வீடுகளின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்று, நேரடியாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.