
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்ததாக அரச தொலைக்காட்சி அறிவிப்பு
ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஆண்டு, டிசம்பர் 28ஆம் திகதி தொடங்கியது.
உயிரிழந்தவர்களில் குறைந்தது 2,400 பேர் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளதுடன், மீதமுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை தொலைக்காட்சி வெளியிடவில்லை.
இதற்கிடையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு ஒன்றின் கணக்குப்படி, ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 4,560ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனுடன் தொடர்புடையதாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருப்பதுபோல் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
