மியான்மாரில் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

மியான்மார் இராணுவத்தினால் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசாங்கத்தை 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில் இராணுவம் அகற்றிய பின்னர், அவசரகால நிலையை அறிவித்தது.
இதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன்படி, இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் சட்டமன்றம், நிர்வாகம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது உச்ச அதிகாரத்தைப் பெற்றார்.
இருப்பினும், மின் ஆங் ஹ்லைங் தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை அமைப்பதாக இராணுவ ஆட்சிக்குழு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மியன்மார் இராணுவ அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள தேர்தலைக் குறைகூறுவோரும், அதற்கு எதிராகப் போராடத் திட்டமிடுவோரும் தண்டிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையூறு செய்வோருக்குக் கட்டாயச் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப் புதிய சட்டம் வழியமைக்கிறது.
குற்றம் நிரூபிக்கப்படும் தனிநபர்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுச் சிறைத்தண்டனையும், குழுவாக இருந்தால் அதிகபட்சம் ஐந்திலிருந்து பத்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டுகள், வாக்களிப்பு நிலையங்களைச் சேதப்படுத்துவோர், வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பணியாளர்கள் ஆகியோரை அச்சுறுத்துவோருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலைச் சீர்குலைக்கும் முயற்சியின் போது யாராவது கொல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.